உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம் உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும். அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது. +எகிப்தின் மாபெரும் பேரரசியாக மயக்கும் பேரழகியாக ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக அகந்தை நிறைந்தவளாக ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்.பண்டைய எகிப்திய வரலாற்றிலும் ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும் மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது.கிளியோபாட்ராவின் அழகு முதல் அவள் இருப்பு மரணம் வரை ஒவ்வோர் அத்தியாயமும் ஆச்சரியங்களாலும் சர்ச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது. விவாதங்களின்றி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒரே விஷயம் ரோம் பேரரசின் பிடியில் எகிப்து இரையாகாமல் தப்பியதற்கு ஒரே காரணம் கிளியோபாட்ரா. பின் இரையானதற்குக் காரணமும் அவளே. முகிலின் இந்தப் புத்தகம் கிளியா கழுகா என எளிதில் கண்டறிய முடியாத ஒரு வினோதப் பெண்ணின் வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது.