புத்தகம் வெளியிடுவதனால் அதற்கு முன்னுரை ஒன்று சேர்ப்பதும் சம்பிரதாயமாகி விட்டது. அந்த சம்பிரதாயத்தை மீற மனமில்லாமலோ என்னவோ இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுத வேண்டிய பொறுப்பை எனது தலையில் கட்டிவிட்டார் நண்பர். அதனால் கதைகளைப் படிப்பதற்கு முன்பாக எனது அளப்புகளைப் படிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் என்ன! கதைகள் என்ன சொல்கின்றன வென்று அறிவதற்கு முன் அவற்றைப் பற்றியும் அவற்றின் பிரம்மாவைப் பற்றியும் நான் என்ன சொல்கிறேன் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயந்தான்.

'கல்யாணி' முதலிய கதைகளைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது இது தான்: நண்பர் வல்லிக் கண்ணன் ஒரு விசித்திர ஜீவன். இந்த உலகத்திலே - இந்த யுகத்திலே வாழ லாய்க்கற்ற பிறவி அவர்.

பின் என்ன?

பெண்களுக்கு உரிமை பெண்கள் சுதந்திரம் பெண்களுக்கு மதிப்பு என்று பெண்மையைப் போற்றி பெண்களுக்கு முதலிடம் கொடுக்கும் இந்த நவயுகத்தில் நவயுகப் பெண்களைக் கிண்டல் செய்வதே லட்சியம் எனக் கொண்டு ஒருவன் கதைகள் எழுதினால்!

காதல் காதல் காதல்; காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கும் இந்த நாட்களில் காதலே பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமாக மிளரும் பொழுது 'எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை.காதலாவது கத்தரிக் காயாவதுஎன்று ஒரு பேர் வழி அலுத்துக் கொண்டு காதல் பண்புகளைக் கிண்டல் செய்தால்? அந்தப் பிரகிருதியை இந்த நூற்றாண்டில் ஒரு பைத்தியம் என்று தானே சொல்ல முடியும்?