தொண்ணூறுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த என்.ஸ்ரீராம் இன்றைய இளைய படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். ''வெளி வாங்கும் காலம்'' தொகுப்பிற்கு பிறகு வரும் அவருடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு ''மாட வீடுகளின் தனிமை''. ஸ்ரீராமின் கதை நிலபரப்பு கொங்கு மண். கதைகளின் கரு சம்பவங்கள் நமக்கு ஏற்கனவே படித்த உணர்வை (deja vu) தரக்கூடும். ஆனால் அதை சொல்லும் முறையில் நம்மை உள்ளிழுத்து கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. கதைகளின் புற சூழலில் வெய்யிலின் வெக்கையையும் மழை/புயல் இவற்றால் ஏற்படும் ஒடுக்கத்தையும் இரவில் நகரில் யாருமற்ற சாலைகளில் சோடியம் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தையும் நாம் உணர முடியும். கதை மாந்தர்களின் உணர்வுகளும் ஒரு விதத்தில் அது போல் தான் உள்ளன. வாழ்கையின் பிரச்சனைகளால் ஏற்படும் மன புழுக்கம் அதன் அழுத்தத்தால் ஏற்படும் மன ஒடுக்கம் தனிமையின் வாதை இவற்றின் ஊடே தான் இந்த கதைகளில் உள்ள மனிதர்கள் பயணிக்கின்றார்கள்.