*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹155
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
தொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலனங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாததே.அவற்றைப் பதிவு செய்வதன் வழியாகவே கடந்து செல்ல முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கையை இலக்கியம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வாமையை உருவாக்குகிறவற்றைப் புரிந்துகொண்டாலன்றி சற்றேனும் நியாய உணர்வு கொண்ட மனிதன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியிருக்கிறது.வெகு தூரத்தில் இருந்து மட்டும் ஒவ்வாமைகளும் விலக்கங்களும் நம்மை வந்தடைவதில்லை. தொடர்ந்து நம்மை நாம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். தொடர்ச்சியாக நமக்கு இடையேயான நுண்திரைகள் அறுபட்டு விழுந்தவண்ணமே உள்ளன. அறிந்தவர்களையே இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அறிய நேர்வதால் ஏற்படும் நிலையின்மை இத்தனை நாள் அறிந்தவர்கள் என எண்ணி இருந்தவர்கள் வேறொருவரென மாறி நிற்பதைக் காண்கையில் அடையும் துணுக்குறல் என ஒவ்வொரு கணமும் அறிந்த ஒரு மனிதன் ஒரு மனிதன் மட்டுமல்ல என்பதைத் தொடர்ந்து உணர்ந்துகொண்டே இருக்கிறோம். இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் அறுபட்டு விழுவது அந்த நுண்திரை மட்டும்தான். அத்தகைய நுண்ணியவற்றைச் சொல்வதே இன்றைய நாளில் சிறுகதையின் பங்களிப்பென இருக்க இயலும். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அதையே செய்கின்றன.***''ஓர் ஆற்றல்மிக்க இளம் படைப்பாளியை அறிமுகப்படுத்தும் படைப்பு இது. தமிழில் மறுக்கமுடியாதபடி தன் இடத்தை நிறுவப்போகும் ஒருவரைப் பல பக்கங்களில் நமக்குக் காட்டித்தருகிறது. அப்பட்டமான மேல்தளத் தன்மை மட்டுமே கொண்ட சமகாலப் படைப்புகளுக்கு நடுவே புனைவுலகில் மேல்தளத்தன்மை என்பது ஒரு மாயத்தோற்றமே என்றும் அடியில் நிகழும் பின்னல்களையே புனைவுகள் உருவாக்குகின்றன என்றும் நம்பும் ஒருவரின் வருகை எல்லா வகையிலும் கொண்டாடத்தக்கது.''- ஜெயமோகன் (சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர்நிழல்’ நாவல் குறித்து)