பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல் அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்பதுதான். இந்த நாவலும் ஒருவகையில் ஆசிரியர் தனது இளம்பருவத்தின் தனி அனுபவங்களையும் சமூகப் பாடங்களையும் மீட்டெடுத்து இன்றைய பார்வையில் பார்க்கும் முயற்சிதான். மீளாமல் சென்றுவிட்ட அந்த நாட்களை இன்று நினைவுகூர்ந்து சொல்லும்போது தன்னை மிகையாகவும் சாகசமாகவும் முன்வைக்கும் வாய்ப்பு மிகுதி. இன்றைய பக்குவப்பட்ட பார்வையிலும் தன் பழைய அனுபவங்களை அவை நிகழ்ந்த தருணத்தின் தட்பவெப்பத்துடன் இயல்பாகச் சொல்கிறார் ஆசிரியர். இந்தப் பகட்டின்மையே நாவலின் முதல் மேன்மை. சென்ற நூற்றாண்டின் 70 - 80கள் உலகெங்கும் புதிய திசை மாற்றங்களுக்கு அடிகோலின. தனிநபர் வாழ்விலும் சமூகச் சூழலிலும் பண்பாட்டுப் பின்புலத்திலும் மாற்றத்தைத் தூண்டின. தமிழ்ச் சூழலிலும் அதன் விளைவுகள் தென்பட்டன. அவற்றை மையப்பாத்திரமான சந்திரனின் வாழ்க்கைப் பின்புலத்தில் சித்திரிக்கிறது நாவல். கடந்துபோன காலத்தை மீண்டும் கட்டியெழுப்பிப் பார்க்கிறது. இது இதன் இரண்டாவது சிறப்பு. மொழிபெயர்ப்பாளராக வேறுபட்ட கூறுமுறைகள்கொண்ட ஆக்கங்களை வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர் ஆர். சிவகுமார். ஆனால் எந்தச் சாயலும் படியாமல் தனது அனுபவங்களை நேரடியாகவும் எளிமையாகவும் வாசகருக்கு நெருக்கமான தொனியிலும் படைப்பாக்கியிருக்கிறார். இந்த உண்மையுணர்வே நாவலின் உச்சமான இயல்பு.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.