யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அதுவே இந்த முயற்சிக்கான மூலகாரணம். இந்த கட்டுரைகள் அத்தனையையும் ஒருவர் படித்து விட்டாரென்றால் நிச்சயம் உலகத்தை மயில் வாகனம் இல்லாமலேயே சுற்றி வந்து விட்ட உணர்வை ஏய்துவார் என்பது திண்ணம். அத்தனை சுவாரஸ்யங்கள் இதற்குள் பொதிந்து இருக்கின்றன. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கப்பலில் விமானத்தில் உலக நாடுகளுக்கு போய் பணம் ஈட்டுவது மட்டுமல்ல கப்பலோ விமானமோ ஏறாமலே இருந்த இடத்திலிருந்தே கொஞ்சம் நேசிப்போடு உலக சினிமாவை தேடினால் திரை மகள் நம்மை தேடி வருவாள். புதுச்செல்வம் தருவாள். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல. கலைமகள் தருகிற அறிவுச் செல்வமும் செல்வம் தான். அதை திரைகடல் தாண்டி இருக்கிற அத்தனை உலக நாடுகளின் திரைக்காவியங்களை இந்த உலக சினிமா புத்தகங்களின் வாயிலாக தரிசிக்க இருக்கிறீர்கள். அந்த அனுபவம் நம்மை திரும்ப திரும்ப அதை நினைத்து பரவசிப்பில் ஆழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது. Recommendation: குலசேகரின் எழுத்துகள் மிகவும் வலிமையானவை ஆழமானவை அதே சமயம் எளிமையாக மனதில் இடம் பிடித்துக் கொள்ள கூடியவை. கடந்த ஏழு வருடங்களாக அவர் ரசித்த உலக திரைப்படங்கள் ஆவணப்படங்கள் குறும்படங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஏழு பாகங்களாக இதனை நேர்த்தியாக தொகுத்து வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அவரது எழுத்துகள் நுட்பமானவை மட்டுமல்ல திரைநுணுக்கங்களையும் அழகியலையும் ஒருங்கே உள்ளடக்கியவை. அந்த ஆற்றல் அவரிடம் இருப்பதாலேயே அத்தனை ஆழமான விசயங்களை கூட எளிமையாக சரளமாக சுவாரஸ்யமாக அவரால் எழுதி விட முடிகிறது. - இயக்குநர் பாலாஜி சக்திவேல்